எக்காரணத்தை கொண்டும் பள்ளி வளாகம், கழிப்பறை பகுதி களை சுத்தம் செய்யும் பணிக்கு மாணவர்களை ஈடுபடுத்த கூடாது' என, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

திருப்பூர்;'.தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாணவ,- மாணவியர் பள்ளிக்கு வரும்போதும், இடைவேளை நேரம், மதிய உணவு நேரம் மற்றும் பள்ளி முடிந்து வீடு திரும்பிச் செல்லும் போதும், முறையாக கண்காணிக்க ஆசிரியர்களை, சுழற்சி முறையில்
நியமிக்க வேண்டும்.

சத்துணவு தயாரிக்கும் போதும், பரிமாறும் போதும் நேரடி கவனம் செலுத்த வேண்டும். தலைமை ஆசிரியர் சுவைத்து பார்த்த பிறகே, மாணவர்களுக்கு பரிமாற வேண்டும். பள்ளி வேளையில் மாணவ மாணவியர், இயற்கை உபாதை, குடிநீர் மற்றும் தின்பண்டம் வாங்க வெளியே செல்லக்கூடாது. மாணவர்கள் இடையே மோதலை தவிர்க்க, கலந்துரையாட வேண்டும். காலையில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வருவதற்கு முன்பே, பள்ளிக்கு வர வேண்டும்; மாலையில் மாணவர்கள் பள்ளியை விட்டுச் சென்ற பிறகே, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செல்ல வேண்டும். எக்காரணத்தை கொண்டும் பள்ளி வளாகம், கழிப்பறை பகுதிகளை சுத்தம் செய்யும் பணிக்கு மாணவர்களை ஈடுபடுத்த கூடாது.

பள்ளி நேரத்தில், வெளியாட்களை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது.பத்திரிகை நிருபர்களை, எக்காரணம் கொண்டும், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில், பள்ளி வேலை நேரத்தில் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதியின்றி, பேட்டி கொடுக்கவோ கூடாது.
பாடவேளையில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மொபைல் போன் பயன்படுத்த கூடாது.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி விருப்பப்பட்டியல் சேகரிப்பு

மத்திய அரசு சார்பில், மைசூரில் நடக்கும், பத்து மாத மொழிக்கல்வி பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்களிடம் விருப்பப்பட்டியல் சேகரிக்கப்படுகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், மொழிக்கல்வியை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு, பத்து மாதம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் உள்ள, 20 மொழிக்கும், அந்தந்த மொழி ஆசிரியர்களை தேர்வு செய்து, ஏழு மையங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.
மைசூரில் உள்ள தென்னிந்திய மொழிக்கல்வி மையத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், தமிழ்மொழிக்கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களில், 44 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், பங்கேற்க விருப்பம் உள்ள தமிழாசிரியர்களின் விண்ணப்பங்களை சேகரித்து, இம்மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கும்படி, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வரும் ஜூலை, 4ம் தேதி தொடங்கும் இப்பயிற்சி, 2017 ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு பயணப்படி, அகவிலைப்படி உள்ளிட்டவற்றையும், மண்டல மொழிக்கல்வி மையம் ஏற்றுக்கொள்கிறது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட படிவம் 12-பி 24ம் தேதி வழங்கப்பட உள்ளது.7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வரும் 24ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் உள்ள 19 லட்சத்து 94 ஆயிரத்து 357 வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக 2,256 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் அன்று 11 ஆயிரத்து 851 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களின் சொந்த தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு நியமிக்கப்படுவதால், அவர்கள் ஓட்டுப்போட வசதியாக தபால் ஓட்டு வழங்கப்படும்.

இந்த தபால் ஓட்டுகள் கடந்த தேர்தலில் உரிய நேரத்தில் வழங்காததால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், இந்த தேர்தலில் முன்கூட்டியே தபால் ஓட்டுகள் வழங்கிட வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.

அதனையேற்ற தேர்தல் ஆணையம், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட வசதியாக முதல்கட்ட பயிற்சி வகுப்பிலேயே படிவம் 12-பி வழங்கிட உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு வரும் 24ம் தேதி, மே மாதம் 7 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. அதில் முதல் பயிற்சி வகுப்பு நடைபெறும் 24ம் தேதி அனைவருக்கும் படிவம்-12-பி வழங்கப்பட உள்ளது. அதனை அவர்கள் உடனடியாகவோ அல்லது 7ம் தேதி பயிற்சி வகுப்பு முடிவதற்குள்ளோ பூர்த்தி செய்து வழங்கினால், 7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.

அதன் படிவங்களை பூர்த்தி செய்து, ஓட்டு சீட்டில் தனது ஓட்டை பதிவு செய்து பயிற்சி வகுப்பு மற்றும் தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் சேர்க்கலாம். அல்லது தொகுதி தேர்தல் அலுவலருக்கு தபாலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதால் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

4.73 லட்சம் தபால் ஓட்டுகள்

தமிழகத்தில், 4.73 லட்சம் வாக்காளர்கள், தபால் ஓட்டு போட உள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் பணியில், 3 லட்சத்து 3 ஆயிரம் அரசு ஊழியர்கள்; ஒரு லட்சம் போலீசார்; 70 ஆயிரம் டிரைவர், வீடியோகிராபர் மற்றும் பிற ஊழியர்கள் என, மொத்தம் 4.73 லட்சம் ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களுக்கு, மே 5ம் தேதி, தபால் ஓட்டு சீட்டு வழங்கப்படும். அவர்கள், மே 6ம் தேதியில் இருந்து, மே 18ம் தேதி வரை, தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி அலுவலர் அறை முன் வைக்கப்பட்டிருக்கும், ஓட்டுப் பெட்டியில், தபால் ஓட்டுகளைப் போடலாம்.
தபால் மூலமாகவும், தபால் ஓட்டுகளை, சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பலாம்

அரசு ஊழியர்களுக்குஅகவிலைப்படி உயர்வு


           தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், ஆகியோருக்கு, 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம், அகவிலைப்படி உயர்த்தப்படும். அதை தொடர்ந்து, மாநில அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியை, மாநில அரசுகள் உயர்த்தும்.
இந்த ஆண்டு ஜனவரியில் உயர்த்த வேண்டிய அகவிலைப்படியை, மத்திய அரசு மார்ச் மாதம், 6 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும், 6 சதவீதம் அகவிலைப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அகவிலைப்படி, 119 சதவீதத்தில் இருந்து, 125 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு அலுவலர்களுக்கு, 366 முதல், 4,620 ரூபாய் வரை, கூடுதலாக கிடைக்கும். அகவிலைப்படி உயர்வு, ஜனவரி, 1ம் தேதி முதல் கணக்கிட்டு, ரொக்கமாக வழங்கப்படும். இதன் மூலம், 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.