தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தலின்போது ஓட்டுச் சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்ப்பது, விரலில் மை வைப்பது உள்ளிட்ட பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் விவரங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே சேகரிக்கப்பட்டு, தேர்தல் துறை சார்பில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.மேலும், தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளை அவரவர்களின் முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும். இதனை பெற்றுக் கொள்ளும் ஆசிரியர்கள், பணிக்குச் செல்லும் முன்பாக அவரவர் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டை பதிவு செய்து, அதனுடன் உள்ள உறுதிமொழி கடிதத்தில் கையெழுத்திட்டு, அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போடுவது வழக்கம்.இந்நிலையில், கடந்த இரண்டு தேர்தல்களில் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கள் காலதமதமாக கிடைத்ததால் அவர்கள் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டது. அதில் பெண் ஆசிரியர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பயனும் இல்லாமல் போனது. இதன் காரணமாகவே கடந்த இரு தேர்தல்களிலும் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது. இந்த தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்திட தீவிர நடவடிக்கை எடுத்து வரும் தேர்தல் ஆணையம், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்கள் ஓட்டை பதிவு செய்வதை உறுதி செய்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் தொடர்பாக இரண்டு கட்டங்களாக பயிற்சி நடத்தி, மூன்றாம் கட்டமாக எந்த ஓட்டுச் சாவடியில் பணிபுரியப் போகிறோம் என்பதற்கான பணியாணை வழங்குவர்.
இந்த தேர்தலுக்காக வரும் ஏப்ரல் 24 மற்றும் மே 7ம் தேதிகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பும், மே 15ம் தேதி பணியாணை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சியின் போதே தபால் ஓட்டுக்களை வழங்கினால், அவரவர் ஓட்டினை பதிவு செய்து நிம்மதியாக பணிக்கு செல்வர். இதற்கு தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.