பிளஸ்-2 கணித தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
பிளஸ்-2 கணித தேர்வு
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 மாணவ-மாணவிகள் எழுதி வருகின்றனர்.
நேற்று கணிதம், விலங்கியல், நுண்உயிரியல், ஊட்டச்சத்து-உணவுக்கட்டுபாடு ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. கடந்த 14-ந்தேதி நடைபெற்ற வேதியியல் தேர்வு கடினமாக இருந்ததாகவும், மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் மாணவ-மாணவிகள் தெரிவித்து இருந்தனர். வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது போல, கணித தேர்வும் கடினமாக இருந்து விடுமோ என்ற அச்சத்திலே தேர்வு அறைக்கு சென்று தேர்வு எழுதினார்கள்.
ஆனால், தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகளில் முகத்தில் சந்தோஷம் நிலவியது. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கணித தேர்வு சற்று எளிதாக இருந்ததாகவும், விலங்கியல் தேர்வும் எளிதாகவே இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி அணு கூறியதாவது:-
மகிழ்ச்சி
பிளஸ்-2 கணித தேர்வு எளிதாக இருந்தது. பாடத்திட்டத்தை தரவாக பார்த்த மாணவ-மாணவிகள், அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியும். எங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஒவ்வொரு கேள்வியையும் நன்கு படித்து பார்த்த பின்பு விடையளிக்க அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி, நான் இந்த தேர்வை எழுதினேன். இந்த தேர்வில் நான் 200-க்கு 200 மதிப்பெண் எடுப்பேன். வேதியியல் தேர்வில் இழந்த மதிப்பெண்ணை இந்த தேர்வு மூலம் சரிகட்டுவேன். கடந்த ஓராண்டாக கடின உழைப்புடன் படித்ததற்கு எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், மற்ற மாணவிகள் கூறும்போது, ‘கணித தேர்வில் நாங்கள் எதிர்பார்த்தது போல் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. சற்று எளிதாகவே இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. 6 மதிப்பெண் வினாக்களில் 2 கேள்விகள் நேரடியாக கேட்காமல், சுற்றிவளைத்து கேட்கப்பட்டு இருந்தது. 10 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிதாகவே இருந்தது. வேதியியல் தேர்வை போல் கணித தேர்வும் கஷ்டமாக கேட்டுவிடுவார்களோ? என்று நினைத்தோம். ஆனால் இந்த தேர்வு நன்றாகவே இருந்தது’ என்றனர். ஆனால் ஒரு சில மாணவ-மாணவிகளோ கணித தேர்வு கொஞ்சம் கடினமாக இருந்ததாக தெரிவித்தனர்.
ஆசிரியர் கருத்து
கணித தேர்வு குறித்து கணித ஆசிரியர் காமராஜ் கூறும்போது, ‘புத்தகம் முழுவதையும் நன்கு படித்திருந்த மாணவ-மாணவிகள் மட்டுமே 200-க்கு 200 மதிப்பெண் இந்த தேர்வில் எடுக்க முடியும். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் சற்று வித்தியாசமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்கப்படும் வினாக்கள் இந்த முறை குறைவாகவே வந்திருந்தது. தேர்ச்சி மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கும், 200-க்கு 200 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கும் ஏற்றாற்போல் இந்த ஆண்டு வினாக்கள் கேட்கப்பட்டு இருக்கின்றன. இது என்னுடைய கருத்து. மற்ற ஆசிரியர்கள் சற்று வித்தியாசமாக சொல்வார்கள்’ என்றார்.
விலங்கியல் தேர்வு
விலங்கியல் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கூறும்போது, ‘புத்தகத்தில் இருந்து தான் அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டு இருந்தன. அனைவரும் நன்றாகவே தேர்வு எழுதி இருக்கிறோம்’ என்றனர். அடுத்த தேர்வு வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. பிளஸ்-2 தேர்வு அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ந்தேதியுடன் நிறைவடைகிறது.