அரக்கோணம்: பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில் விடைத்தாள்களில் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு தேவைப்பட்ட வெள்ளைதாள்களை வைக்காமல் அனைத்தையும் கோடிட்ட தாள்களாக வைத்திருந்ததால் 5 மதிப்பெண் கேள்விக்கு விடை எழுத முடியாமல் மாணவ மாணவிகள் திணறினர்.
இது குறித்து தேர்வு மைய கண்காணிப்பாளர்களிடம் கேட்டால் வந்த விடைத்தாள்களை அளிக்க வேண்டியதே எங்கள் பணி என்று தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பிற்கான ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுகள் செவ்வாய்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் மூன்றாம் பிரிவில் 12-வது கேள்விக்கு கீழ்க்கண்ட குறிப்புகளை வைத்து விளம்பரம் ஒன்றை தயாரிக்கவும் என கேள்வி அளிக்கப்பட்டு அதற்குண்டான குறி்ப்புகள் தரப்பட்டிருந்தன. இது போன்ற கேள்விகளுக்கான பதில்களை மாணவர்கள் எப்போதும் வெள்ளை விடைத்தாள்களில் தான் எழுதப்படுவது வழக்கமாம். கடந்த வருடம் வரை ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கான விடைத்தாள்களில் கோடிட்ட தாளுடன் ஒரு வெள்ளைத்தாள் இணைக்கப்பட்டிருந்ததாம். ஆனால் இவ்வருடம் வெள்ளைத்தாள் இணைக்கபடவே இல்லை. இதனால் மாணவர்கள் அந்த விளம்பரம் அழகாக எழுத வெள்ளைத்தாளை கேட்ட நிலையில் தேர்வு மையங்களில் அது மாணவர்களுக்கு தரப்படவில்லை. இதனால் பல மாணவர்கள் அந்த பதிலை கோடிட்ட தாள்களிலேயே எழுதினர்.
இது குறித்து அரசுப்பள்ளி ஒன்றின் ஆங்கில ஆசிரியை ஒருவரை கேட்டபோது,
நடந்து முடிந்த ஆங்கில மாதிரி தேர்வுகளில் கூட இது போன்ற கேள்விகள் வந்தால் வெள்ளைத்தாளில் மட்டுமே எழுத மாணவர்களுக்கு பயிற்சி அளித்திருந்தோம். கடந்த ஆண்டு வரை ஆங்கில இரண்டாம் தாள் விடைத்தாள்களில் வெள்ளைத்தாள் ஒன்றும் இணைக்கப்பட்டே மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் ஏனோ இம்முறை வெள்ளைத்தாள் அளிக்கப்படாததால் மாணவர்கள் கோடிட்ட தாளில் அந்த விடையை எழுதியுள்ளனர். எப்போதும் கோடிட்ட தாளில் அந்த விடை எழுதப்பட்டிருந்தால் நாங்களே திருத்தும் போது அந்த கேள்விக்கு மதிப்பெண்ணை குறைத்தே அளி்ப்போம். வெள்ளைத்தாளில் அந்த விடை இருந்தால் அழகாக இருக்கும். முழு மதிப்பெண் அளிப்போம். இம்முறை விடைத்தாள் சரியாக அளிக்கப்படாததால் மாணவர்கள் 5 மதிபபெண் இழப்பது தவிர்க்க இயலாததாகிவிட்டது என்றார்.
பல மாணவ, மாணவிகள் இது குறித்து தெரிவி்க்கையில் இந்த ஒரு கேள்வியினால் மட்டுமே எங்களுக்கு ஐந்து மதிப்பெண் குறையும் நிலை ஏற்பட்டு விட்டது என அழுதுக்கொண்டே தெரிவித்தனர்.