ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 1,063 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
2016-17ம் கல்வியாண்டில் பணி ஓய்வு பெறுவோர் உட்பட 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடம் உருவாகும் நிலை உள்ளது. இதில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். எஞ்சிய 50 சதவீதம் தேர்வு மூலமே நியமிக்க முடியும். பதவி உயர்விற்காக 2002-03 முதல் 2008 வரையிலும் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாடங்களை பொறுத்து பதவி உயர்விற்கு பணி மூப்பு பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேரடி நியமன விதிமுறைப்படி 1,063 பேருக்கான டி.ஆர்.பி., எழுத்துத் தேர்விற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கென சிறப்பு அரசாணை வெளியிட்ட நிலையில், தேர்வுக்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் சட்டசபை தேர்தல் காரணமாக டி.ஆர்.பி., தேர்வு தள்ளி போக வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஜூன் அல்லது ஜூலையில் தேர்வு நடக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.