அரசியல்வாதிகளின் குறுக் கீட்டால் மனநிறைவுடன் பணியாற்ற முடியவில்லை என உளுந்தூர்பேட்டை அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமையாசிரியர் கலைச்செல்வன் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கும் விழா பள்ளியின் பெற்றோர் -ஆசிரியர் கழக தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு கலந்து கொண்டார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் வரவேற்று பேசும்போது, ''பள்ளியின் வளர்ச்சிக்காக அனைத்து ஆசிரியர்களும் கடுமையாக உழைத்து பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தி வருகிறோம். அதனால் இந்த ஆண்டு பள்ளியின் தேர்ச்சி விகிதம் 90 சதவிகிதத்தை எட்டியுள்ளது.
ஆனால் இந்த பள்ளியில் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் எங்களால் மன நிறைவுடன் பணியாற்ற முடியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்திருந்த நிலையில், ஆசிரியர் என்ற முறையில் நான் அந்த மாணவிக்கு அறிவுரை கூறினேன். அதனால் அந்த மாணவியின் திருமணம் நின்றது. இதனால் அந்த மாணவியின் உறவினர்களான அரசியல்வாதிகள், ஆசிரியர்களை அவமானப்படுத்தினர். இந்த சம்பவம் வேதனை அளிக்கிறது.''என்று மிக வருத்தத்துடன் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘‘பள்ளிகளில் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இருந்தால் தொடர்ந்து இந்த பள்ளி 100 சதவிகித தேர்ச்சியை எட்டும்'' என்றார்.
அதன்பின் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாட நூல்களை வழங்கி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை வாழ்த்தி பேசினார். தலைமையாசிரியர் ஆதங்கப்பட்டு பேசியது தொடர்பாக, ஒரு அரசியல்வாதி என்ற முறையில் குமரகுரு எம்எல்ஏ விளக்கம் தருவார் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் விலையில்லா பாடநூல்களை வழங்கி விட்டு விறுவிறுவென கிளம்பி விட்டார்.