ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கிருஷ்ணசாமி வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆண்டுதோறும் நடைபெறும் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை நடப்பாண்டில் உடனடியாக எவ்வித ஒளிவுமறைவின்றி நடத்த வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் மற்றும் மூத்தோர், இளையோர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஆசிரியர் குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்ட காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.