அரியலுார் அருகே, சாலைக்குறிச்சி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 80 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியையான புனிதவதி, நேற்று காலை, 10:00 மணியளவில், மாணவ, மாணவியரை பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தி, குப்பையை அள்ளும்படி சொன்னார். மேலும், பள்ளியில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்யும்படியும் கூறியுள்ளார். இத்தகவலறிந்த பெற்றோர், தலைமை ஆசிரியை கண்டித்து, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர், பெற்றோரிடம் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து விசாரித்ததில், மாணவர்களை, தலைமை ஆசிரியை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது, உண்மையென தெரியவந்தது. இதையடுத்து, தலைமை ஆசிரியை புனிதவதியை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.