எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அறிவியல் பாடங்களை சுவாரஸ் யமாகவும் விரைவாகவும் கற்க உதவும் வகையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதுமை யான டிவிடி-யை 6 ஆயிரம் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிக்கல்வியின் தரத்தை மேம் படுத்தவும், கற்பித்தல், கற்றல் பணியில் புதுமையான முறைகளை கொண்டுவரவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர் களின் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
10, 12-ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் பாடங்களை சுவாரஸ்மாகக் கற்கும் வண்ணம், பட உட்கிரகிப்பு தொழில்நுட்பத்தைப் (Image Recognition Application Technology) பயன்படுத்தி மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் புதிய செயலியை (tn schools live) உருவாக்கியுள்ளது. செல்போனில் (ஆண்ட்ராய்டு) கூகுள் பிளே ஸ்டோரில் (tn schools live) இருந்து இந்த செயலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
முப்பரிமாணம்
மாணவர்கள் அறிவியல் பாடத்தில் ஏதாவது ஒரு பாடம் புரியவில்லை என்றால் அந்த பாடத்தி்ல் இடம்பெற்றுள்ள படம் மீது இந்த செயலியுடன் கூடிய செல்போனை வைத்து ஸ்கேன் செய்தால் போதும். அந்த படத்தை முப்பரிமாணத்தில் பார்க்க முடிவதுடன் பாடம் குறித்த விளக்கத்தையும் மாணவர்கள் கேட் கலாம். உதாரணத்துக்கு, மனித நரம்பு மண்டலம் தொடர்பான பாடத்தில் அதுதொடர்பாக இடம் பெற்றிருக்கும் படத்தின் மீது செல்போனை காண்பித்தால் (ஸ்கேன் செய்தல்) மனித நரம்பு மண்டலத்தை முப்பரிமாணத்தில் பார்க்கலாம். அதோடு அதன் ஒவ்வொரு பகுதியை பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் தொடர் பான எளிமையான விளக்கத்தையும் கேட்கலாம்.
கடினமாகத் தோன்றும் அறிவியல் பாடங்களுக்கு முப்பரிமாண படங்களுடன் எளிமையான முறையில் விளக்கமும் அளிக்கப் படுவதால் மாணவர்கள் பாடத்தை சுவாரஸ்யமாகவும் ஆர்வத் தோடும் படிக்க முடியும். இந்த புதிய செயலியை முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜூலை மாதம் தொடங்கிவைத்தார். இண்டர்நெட் வசதியுடன் கூடிய செல்போன் வைத்திராத மாணவர்களும் இந்த செயலியைப் பயன்படுத்தி பாடங்களைப் படிக்கும் வகையில் ஆண்ட்ராய்டு ஆப்லைன் வெர்சன் உள்ளடக்கிய டிவிடி-யை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தற்போது புதிதாக உருவாக்கியிருக்கிறது. இந்த டிவிடி அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.
நாட்டிலேயே முதல்முறை
இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முரு கன் கூறியதாவது:
பட உட்கிரகிப்பு தொழில் நுட்ப செயலி செல்போன் தொழில் நுட்பத்தில் நவீன பயன்பாடாகவும், மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகவும் இருந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை கல்வியுடன் இணைக்கும்போது ஆசிரியர்களின் கற்பித்தல் பணியிலும், மாணவர்களின் கற்கும் பணியிலும் புதுமையைக் கொண்டுவர முடியும். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த செயலி. இந்தி யாவிலேயே தமிழகத்தில்தான் முதல்முறையாக இத்தகைய செயலி பள்ளிக் கல்வியில் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த செயலியைப் பயன்படுத்தி மாணவர்கள் நாள் முழுவதும் கற்கலாம். முப்பரிமாண படங்கள் மூலம் அவர்களுக்கு பாடங்கள் விளக்கப்படுவதால் படிப்பில் சலிப்பும் ஏற்படாது. விரைவாக படிக்க முடிவதுடன் சுவாரஸ்யமாகவும் கற்கலாம்.
இண்டர்நெட் இணைப்புடன் கூடிய செல்போன் வைத்திருக் காத மாணவர்களையும் இந்த செயலியின் பயன் சென்றடையும் வண்ணம் நவீன தொழில் நுட்பத்தில் புதுமையான டிவிடி-யை உருவாக்கியுள்ளோம். தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு இந்த டிவிடி விரைவில் வழங்கப்படும். இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் பயன்பெறுவர்.
இவ்வாறு ராமேஸ்வர முருகன் கூறினார்.