மதுரை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இவர்களை மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய, கல்வித்துறை பரிசீலிப்பதால், 3 ஆயிரம் பேர் கலக்கத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஆக.,1 நிலவரப்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். இந்தாண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளது. ஆங்கில வழி வகுப்பு களிலும், மாணவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட வில்லை. இதனால் மாணவர் - ஆசிரியர் விகிதாசாரம் அடிப்படையில், மாநில அளவில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.
காரணம் என்ன : ஐந்து ஆண்டுகளில், ஏராள மான புதிய தொடக்க பள்ளி துவங்கப்பட்டன. நடுநிலை- உயர்நிலையாகவும், உயர்நிலை- மேல்நிலையாகவும் தரம் உயர்த்தப்பட்டன. அங்கு, அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.) மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில், புதிய பணியிடம் உருவாக்கப்பட்டன.
இப்பள்ளிகளில், வரும் காலங்களில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு எதிர்பார்த்தது. மாறாக குறைந்ததால் ஆசிரியர் 'சர்பிளஸ்' ஏற்பட்டது. மேலும் ஆங்கில வழி கல்வியிலும் குறைந்தபட்சம், 15 மாணவர் இல்லாத வகுப்புகளின் ஆசிரியர்களும், 'சர்பிளஸ்' பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
ஜூனியர்கள் எதிர்ப்பு : 'சீனியர்' ஆசிரியர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியில் உள்ளனர். பணி நிரவல் என்றால் முதலில் பாதிப்பது, 'ஜூனியர்'கள் தான். 'பல ஆண்டுகளாக பணியாற்றும் சீனியர்கள், ஏன் மாணவர் சேர்க்கையில் அக்கறை செலுத்த வில்லை,' என ஜூனியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், 'வெளி மாவட்டங்களில் பணியாற்றிய நாங்கள், பல லட்சம் ரூபாய் 'இழந்து' தான் சொந்த மாவட்டங்களுக்கு மாற்றலாகினோம். மாணவர் எண்ணிக்கை குறைவால், 'சர்பிளஸ்' கணக்கில் வரும் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் மாற்றப் படுகிறோம். எங்களுக்கும்
குடும்ப சூழ்நிலை உள்ளது' என்றனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அதிகாரிகள் சிலர் தங்கள் 'தேவை' கருதி, குறைந்த மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளிலும், ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு போதிய கவனம் செலுத்தாமல், 'தும்பை விட்டு வாலை பிடிக்கும்' கதையாக தற்போது ஆசிரியர்களை அலைக்கழிக்க முடிவு செய்துள்ளது. 'சர்பிளஸ்' ஆசிரியர்களை மாறுதல் செய்வதற்கு பதில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.