ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய நகர்ப்புற, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை தெரிவித்தார்.
ஹைதராபாதில் சனிக்கிழமை ஆந்திர-தெலங்கானா வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அமைச்சர்களுக்கும், பணக்காரர்களுக்கும் ஏன் மானியம் வழங்க வேண்டும்? பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது தொடர்பாக என்னிடம் பேசினார். அப்போது, "எரிவாயு மானியத்தை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு 3 கோடி போலி இணைப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் செலவு மிச்சமாகியுள்ளது' என்று அவர் என்னிடம் தெரிவித்தார். வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா பெருமளவில் ஈர்த்து வருகிறது.
நாட்டின் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் சில விரும்பத்தகாத சம்பவங்களை வேண்டுமென்றே பெரிதுபடுத்தி சர்வதேச அளவில் நாட்டின் புகழை சிலர் கெடுக்கின்றனர் என்றார் வெங்கய்ய நாயுடு.
பிரதமர் மோடிக்கு எதிரான விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "மக்கள் வாக்களித்து மோடியைப் பிரதமராக தேர்வு செய்துள்ளனர். இதனை எதிர்ப்பாளர்கள் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்' என்றார்.