மதுரை: மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தோல்வி அடைந்தது தெரியவந்துள்ளது.
கடந்தாண்டு 92.87 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 95 சதவீதத்திற்கும்மேல் தேர்ச்சி பெற கல்வித்துறை திட்டமிட்டது. ஆனால் 93.19 சதவீதம் தேர்ச்சியே பெற முடிந்தது. இதற்கு காரணம் மொழிப் பாடங்கள் மற்றும் கணிதத்தில் எதிர்பார்க்காத எண்ணிக்கையில் மாணவர்கள் தோல்வியடைந்தது தான்.
மாவட்டத்தில் கணிதம் தேர்வை 19,524 பேர் எழுதியதில் 18,712 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் தான் அதிகபட்சமாக 812 பேர் தோல்வியை தழுவியுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.84 சதவீதம் ஆகும்.
இதையடுத்து, தமிழ் பாடத்தில் மாணவர்கள் அதிகம் தோல்வி அடைந்துள்ளனர். மொத்தம் 35,459 பேர் தேர்வு எழுதியதில் 34,677 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர். தோல்வி எண்ணிக்கை 782. தேர்ச்சி விகிதம் 97.79 சதவீதம். ஆங்கிலம் தேர்வை 37,143 பேர் எழுதி 36,480 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இப்பாடத்தின் தோல்வி 663 ஆகும்.
இம்மூன்று பாடங்களில் ஏற்பட்ட எதிர்பாராத அதிக தோல்விகள் காரணமாக தான் மாவட்ட அளவிலான மொத்த தேர்ச்சி விகிதமும் குறைந்து விட்டது.
இதையடுத்து அதிகபட்சமாக தாவரவியலில் 444 பேரும், கணக்கு பதிவியலில் 498 பேரும், பொருளியலில் 437 பேரும் தோல்வி அடைந்தது தெரியவந்துள்ளது. இதில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து ஆய்வு செய்ய தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.