மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ சார்பில் ஆசிரியர்கள் இன்று 3-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னதாக, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ மாநில தொடர்பாளர் பி.இளங்கோவன் அறிவித்தார். அதற்குப் பிறகும் அரசு ஆசிரியர் சங்க நிர்வாகிகளை பேச்சு வார்த்தைக்கு அழைக்காததால் ஏற்கெனவே அறிவித்த படி 30-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. கடைசி நாளான இன்றும் மாவட்ட அளவில் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடந்தது.
சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே இன்று காலை 11 மணியளவில் போராட்டம் நடந்தது. ஜாக்டோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்-இயக்குநர் சங்க மாநிலத் தலைவருமான எஸ்.சங்கரப்பெருமாள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் திடீரென சாலையில் உட்கார்ந்து கோஷமிடத் தொடங்கினர். தொடர்ந்து, அவர்கள் கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஜாக்டோ சார்பில் மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.