தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், காலிப் பணி யிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த 10-ம் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஆறாவது நாளாக போராட்டம் நீடித்தது.
சென்னை சேப்பாக்கம் எழில கத்தில் நடைபெற்ற பேரணி மற்றும் மெரினா கடற்கரையில் நடந்த மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் அப்பர் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பலத்த முழக்கம் எழுப்பினர்.
எழிலகம் வளாகத்தில் பேரணி யாகச் சென்ற அவர்கள், திடீரென மெரினா கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் சிறிதுநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். “தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டத்தின்போது சுமார் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்” என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.தமிழ்செல்வி கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று (நேற்று) அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் சுமார் 70 ஆயிரம் பேர் கைதாகியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மறியல் போராட்டத்தின்போது எங் கள் புள்ளிவிவரத்தின்படி 1 லட்சம் பேர் திரண்டு, 62 ஆயிரம் பேர் கைதானார்கள். ஆனால், காவல்துறை தரப்பில் தமிழ்நாடு முழுவதும் 32 ஆயிரம் பேர் மட்டுமே கைதானதாக தெரிவிக்கப்பட்டது.
எங்கள் போராட்டத்துக்கு பல் வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. 50 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி எங்களுக்கு ஆதரவு தெரிவித்து, விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
நீதித்துறை ஊழியர் சங்கத்தின ரும் எங்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இம்மாதம் 17-ம் தேதி கோரிக்கைகளை நிறைவேற்றி சட்டசபையில் அறிவிப்பு வெளிவராவிட்டால், நீதித்துறை ஊழியர் சங்கத்தினரும், டாக்டர் சங்கத்தினரும் அன்றைய தினம் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளனர். அத்தியாவசியப் பணி என்பதால் செவிலியர் சங்கம் போராட்டத்துக்கு ஆதரவு மட்டும் தெரிவித்துள்ளது. காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தருவது குறித்து விரைவில் முடிவு எடுக்கவுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டுக்காக நாளை கூடும் சட்டமன்ற கூட்டத் தொடரில் எங்களது முக்கியமான 4 கோரிக்கைகளை நிறைவேற்றி அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். 4 லட்சத்து 32 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதால் உடனடியாக புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும். 10 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 3 லட்சம் பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களை அதே பணியில் அமர்த்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப வேறு பணி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை அரசு கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். எங்கள் சங்கத்துடன் ஏற்கெனவே நடத்திய பேச்சு வார்த்தையின்படி இவற்றை நிறைவேற்ற வேண்டும். இல்லா விட்டால், அடுத்தகட்ட போராட்டம் குறித்து நாளை ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு தமிழ்செல்வி கூறினார்.