அப்துல் கலாம் பிறந்த தினத்தை இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாட வேண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு உத்தரவு

சென்னை அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15-ம் தேதியை இளைஞர் எழுச்சி தினமாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை தமிழக அரசு இளைஞர் எழுச்சி தினமாக அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அக்டோபர் 15-ம் தேதியை (வியாழக்கிழமை) இளைஞர் எழுச்சி தினமாக பள்ளி, கல்லூரிகளில் கோலாகல மாக கொண்டாட வேண்டும் என்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக் கும் அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி, 15-ம் தேதி அன்று விழிப்புணர்வு பேரணி, மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி, கலாம் தொடர்பான எழுச்சியூட்டும் சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளை நடத்து மாறு கல்வி நிலையங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் வருகிற 14, 15-ம் தேதிகளில் சென்னை கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கில் சிறப்பு விண்வெளி கல்வி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத் துப் பள்ளிகளிலும் இளைஞர் எழுச்சி தினத்தை கோலாகல மாக கொண்டாடுமாறு பள்ளிக் கல்வித்துறையும் அறிவுறுத்தி உள்ளது. இதேபோல், அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு மற்றும் உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் கலாம் பிறந்த தினத்தை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுமாறு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.