கோவை: தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், தரமேம்பாட்டு ஆய்வு மற்றும் பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 23 ஆயிரத்து 815 தொடக்கப்பள்ளிகள் மற்றும், 7,307 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு, எ.பி.எல்., எனப்படும் செயல்வழி கற்றல் அட்டை மூலம், பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதில், ஆசிரியர்களுக்கே அதிக எழுத்துப்பணி இருக்கும்.
இதனால், மாணவர்களின், எழுத்து, வாசிப்பு திறன் மற்றும் கணிதத்தில் எளிய கூட்டல், கழித்தல் முறைகளை பின்பற்றுவதில், பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. இது, உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில், தேர்வை எதிர்கொள்ளுதல், தேசிய திறனாய்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்க தடையாக இருப்பதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்த, தர மேம்பாட்டு ஆய்வு நடத்தி, பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி, கடந்தாண்டில் கோவை மாவட்டத்தில், 1,300 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடந்தது.
இதில், ஆங்கிலம் மற்றும் கணிதத்தில், மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன், 35 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. பின், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் வாயிலாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சி அளித்து, கற்றல் முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
நடப்பாண்டில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில், முதற்கட்ட ஆய்வில், 650 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் இறுதி வரை, மாணவர்களுக்கு எளிய பயிற்சிகள், தேர்வுகள் நடத்தி, கற்றல் திறன் குறித்து, அறிக்கை தயாரிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில்,''கோவை மாவட்டத்தில், மொத்தமுள்ள, 15 வள மையங்களில் பணிபுரியும், ஆசிரியர் பயிற்றுநர்கள் வாயிலாக, மாணவர்களின் கற்றல் திறன் பரிசோதிக்கப்படும். எழுத்து உச்சரிப்பு, பிழையின்றி வார்த்தைகள் எழுதுதல், எளிய கணித முறைகளில், அடிப்படை திறன் ஆய்வு செய்யப்படும். இதன் முடிவுகள், செப்டம்பர் மாதத்திற்குள் தயாரித்து, அடுத்தக்கட்ட பயிற்சிகள் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்,'' என்றார்.