மதுரை: தமிழகத்தில் இக்கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' அறிவிப்பு அறிகுறி இல்லாததால், இந்தாண்டும் 'காலம் கடந்து 'கவுன்சிலிங்' நடத்தப்படுமோ' என ஆசிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கல்வித் துறையில் ஆசிரியர்கள் நலன் கருதி, 2001 முதல் 'ஒளிவு மறைவற்ற மாறுதல்
கலந்தாய்வு' நடத்தப்படுகிறது. துவக்கத்தில் பல குளறுபடிகள், அரசியல் தலையீடு, ஒரே இடத்தில் இருவர் நியமனம், காலியிடங்கள் மறைப்பு, மறைக்கப்பட்ட இடங்களுக்கு 'பேரம்' என கல்வித் துறையில் 'கலகலப்பு' இருந்தாலும், இயக்குனராக கண்ணப்பன் பொறுப்பேற்ற பின், கடந்தாண்டு பெரிய அளவிலான புகார்கள் இன்றி கவுன்சிலிங் நடந்து முடிந்தது.
ஒவ்வொரு ஆண்டும் பொது 'கவுன்சிலிங்' அதைத் தொடர்ந்து பதவி உயர்வு 'கவுன்சிலிங்' முடிந்த பின் தான் ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டில் நிம்மதியே இருக்கும்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசியில் விருப்பமுள்ள ஆசிரியர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு, ஜூன் முதல் வாரத்தில் 'கவுன்சிலிங்' நடத்தப்படும். அப்போது தான் கற்பித்தல் பணியிலும் தொய்வு ஏற்படாது. ஆனால் தற்போது, ஜூலை முதல் வாரம் கடந்தும் இதுவரை 'கவுன்சிலிங்'கிற்கான விண்ணப்பங்களே வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுடன் பெரும் குழப்பத்திலும் உள்ளனர்.
சொதப்பல்: தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநில தலைவர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது:முதல்வர் ஜெயலலிதாவால் 2001ம் ஆண்டில், ஒளிவு
மறைவற்ற கலந்தாய்வு முறை, தமிழக கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் காலதாமத பிரச்னை ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மன
உளைச்சல் அடைகின்றனர். பல பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர் பணி
யிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் கல்வி பாதிக்கிறது. அதிகாரிகள் முன்
கூட்டியே திட்டமிட்டு உரிய நேரத்தில் 'கவுன்சிலிங்' நடத்த முன்வர வேண்டும். இந்தாண்டு விரைவில் அறிவிக்க வேண்டும் என்றார்.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் சந்திரன் கூறுகையில், "கவுன்சிலிங் நடக்காததால், ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாடம் இருந்தும் தரம் உயர்த்தப்பட்ட மற்றும் புதிய பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லை. விரைவில் கவுன்சிலிங் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.