இரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கியது தொடர்பாக புகார்
எழுந்துள்ளதால், வழங்கப்பட்ட விருதுகள் பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக, ஆண்டுதோறும் பள்ளி
ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட
வாரியாக தேர்வுக்குழு அமைத்து, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். 'கடந்த ஆண்டு விருது வழங்கியதில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் விதிகள் பின்பற்றப்படவில்லை; தேர்வுக் குழுவில் இருந்த அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது' என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை கடந்த ஏப்ரலில் விசாரித்த நீதிமன்றம், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. 'அப்போது என்ன பதில் அளிப்பது' என, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளிடம், உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறும்போது, 'விதிமுறை பின்பற்றப்படவில்லை என்பது நிரூபணமானால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பான உண்மை நிலை அறிக்கை அடுத்த வாரம், தமிழக அரசு சார்பில், பதில் மனுவாக தாக்கல் செய்யப்பட உள்ளது' என்றனர். இதற்கிடையில், இந்த ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள் ஜூலை, 20ம் தேதி வரை ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட உள்ளது. பரிசீலனை முடிந்து, ஆக., 1ல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து, பள்ளிக்கல்வி தலைமை அலுவலகத்துக்கு பட்டியல் அனுப்ப,
உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.