தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் உருவாக்கப்படாததால், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறும் நிலை ஏற்படுவதாக உடற்கல்வி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 3,566 மேல்நிலைப் பள்ளிகளில் 660 உடற்கல்வி இயக்குநர்களே பணியாற்றி வருகின்றனர். இதனால், கடந்த 25 ஆண்டுகளாக பல பள்ளிகளிலும் உடற்கல்வி இயக்குநர் பணியிடம் உருவாக்கப்படாமல், உடற்கல்வி ஆசிரியர்களே அந்தப் பொறுப்பில் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத் தலைவர் டி.ரவிச்சந்தர் கூறியதாவது:
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 2 உடற்கல்வி ஆய்வாளர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் உள்ளனர். மீதமுள்ள 30 பணியிடங்களை மூத்த உடற்கல்வி இயக்குநர்கள் பொறுப்பில் கவனித்து வருகின்றனர்.
மேலும், ஒருவர் பொறுப்பு பதவியில் 6 மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற அரசாணை இந்த விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. இதனால், 32 மாவட்டங்களில் ஆண்டுக் கணக்கில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பதவி பொறுப்பு பணியிடமாகவே தொடர்ந்து வருகிறது.
தோற்றுவிக்கப்படாத பணியிடங்கள்: இதேபோல, 3,566 மேல்நிலைப் பள்ளிகளில் 660 உடற்கல்வி இயக்குநர்களே உள்ளனர். மேல்நிலைக் கல்வி தொடங்கப்பட்ட காலம் முதல், பல பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் என்ற பதவி தோற்றுவிக்கப்படாமல் உள்ளது. இதனால், 6 முதல் பத்தாம் வகுப்பெடுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களே கூடுதலாக மேல்நிலை வகுப்புகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களாக இருக்கின்றனர். உரிய தகுதி இருந்தும் பதவி உயர்வு பெறாமல் 5,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 99 சதவீதம் பேர் உடற்கல்வி ஆசிரியராகப் பணியேற்று, அதே பதவியிலேயே பணி ஒய்வு பெறுகின்றனர்.
மறுக்கப்படும் வாய்ப்பு: மற்ற பாட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியராகி, மாவட்ட கல்வி அதிகாரியாகி, முதன்மைக் கல்வி அதிகாரியாகி, இணை இயக்குநராகி, இயக்குநராகி பணி ஒய்வு பெறுகின்றனர். இந்த வாய்ப்பு பல ஆண்டுகளாக உடற்கல்வி இயக்குநர்களுக்கு மறுக்கப்படுகிறது. இதேபோல, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியமும் மறுக்கப்படுகிறது. ஆகவே, பொறுப்பு பதவி நிலையை மாற்றி, உடனே நிரந்திரப் பணியிடத்தில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும்.
மேலும், உடற்கல்வி இயக்குநர் நிலை- 1, உடற்கல்வி இயக்குநர் நிலை- 2 ஆகியவற்றுக்கு மாநில அளவிலான பணிமூப்பின்படி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்றார் அவர்.