மதுரை: 'அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளை களைய, அரசு பேச்சு நடத்த வேண்டும்,' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்க மாநில பொது செயலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அரசு நீடித்துள்ளது. 'புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சை தவிர மற்ற சிகிச்சைகளுக்கு ரூ.4 லட்சம் மீண்டும் வழங்கப்படும்' எனவும் அறிவித்துள்ளது. 'கட்டணமில்லா சிகிச்சை' என அறிவித்து விட்டு, 'கண் புரை அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சைக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.45 ஆயிரம்தான் வழங்க முடியும்' என அறிவித்தது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல். இது கட்டணமில்லா சிகிச்சை நோக்கத்திற்கு எதிரானது. சந்தா தொகை ரூ.120 என்பதை ரூ.180 ஆக உயர்த்தியது ஏற்புடையது அல்ல. சந்தா தொகை உயர்வை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டம் குறித்து ஊழியர் சங்கங்களுடன், அரசு பேச வேண்டும். திட்டத்தில் சேருவது குறித்து விருப்புரிமை கோர வேண்டும். மத்திய அரசு, தெலுங்கானா, கர்நாடகா போன்று இத்திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.