மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட, புதிய கல்விக் கொள்கையில், முக்கிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது.
இது, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. முரண்பட்ட பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், புதிய கல்வி கொள்கை குறித்து, 28 பக்கங்கள் அடங்கிய,முக்கிய சாராம்சங்கள் நிறைந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதில், பத்தாம் வகுப்பு வரை, முக்கிய பாடப்பிரிவுகளான, கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில பாடத்துக்கு, ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும். சமூக அறிவியல், மொழிப்பாடம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு, மாநில அரசுகளே பாடத்திட்டத்தை உருவாக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
இதை செயல்படுத்தினால், நாடு முழுவதும் எவ்வித ஏற்றத்தாழ்வு இன்றி, மாணவர்களின் கல்வித்திறன் மேம்பட வாய்ப்பாக இருக்கும் என்பது, பலரது கருத்தாக உள்ளது. மேலும், அடிப்படை கல்வித்தரம் உயரும் பட்சத்தில், மேல்நிலைக்கல்வி, உயர்கல்வி பெறுவதிலும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதிலும் சிக்கல் இருக்காது. பின்தங்கிய கிராமப்புற மாணவர்களும், தேசிய திறனறி தேர்வுகளில் பங்கேற்க முடியும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
கல்வியாளர் சாமிசத்தியமூர்த்தி கூறுகையில், நாடு முழுவதும் ஒரே கல்விமுறை பின்பற்றுவது வரவேற்கத்தக்கது. இதற்கான பாடத்திட்டம் தயாரிக்கும்போது, மாநில வாரியாக, கல்வியாளர்கள், மூத்த ஆசிரியர்களின் கருத்துகளை பெற்று, நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
மேலும், தேர்வு முறைகளும், ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதை, மேல்நிலை வகுப்புகளிலும் பின்பற்றினால், தேசிய அளவிலான தேர்வுகளில் அனைத்து தரப்பு மாணவர்களும் பங்கேற்க உதவியாக இருக்கும்,என்றார்.