ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான விதிகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை இறுதி செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் விதிமுறையை, அரசு உருவாக்கியுள்ளது. இதற்கான அரசாணை, ஜூலை, 6ல் தயாராகி உள்ளது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதே நேரத்தில் இதுபற்றிய தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின், வாட்ஸ் ஆப்களில் வலம் வருகின்றன.
அரசாணை அம்சங்கள்
உபரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்த பின்னரே, பொது மாறுதல் நடத்த வேண்டும். பொது இடமாறுதல் நடக்கும் முன், பரஸ்பர விருப்ப இடமாறுதல்களை நடத்த வேண்டும். தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கு, முதலில் ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்குள் இடமாறுதல் வழங்க வேண்டும். பின், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் வழங்க வேண்டும்.
உயர், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், வருவாய் மாவட்டத்திற்குள் முதலிலும், பின், மாவட்டம் விட்டு மாவட்டமும் இடமாறுதல் வழங்க வேண்டும் கண் பார்வையற்றவர், மாற்றுத்திறனாளி, ராணுவ வீரர்களின் துணைவியர், இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, புற்றுநோயாளி,கணவனை இழந்தோர், 40 வயது கடந்த முதிர் கன்னியர், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை தர வேண்டும்
கணவன், மனைவி என்றால் இருவரில் ஒருவர் பணிபுரியும் இடத்திலிருந்து, 30 கி.மீ.,க்கு அப்பால்,இன்னொருவர் பணியாற்றினால் அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். கணவன், மனைவி என்ற அடிப்படையில், கடந்த ஆண்டு மாறுதல் பெற்றவர்கள், அதே தகுதியில், மூன்று ஆண்டுகளுக்கு மாறுதல் பெற முடியாது. இவ்வாறு பல அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.
தயக்கம் ஏன்?
ஆசிரியர்களின் இடமாறுதல் விதிகளுக்கான அரசாணை நகல்கள், கல்வித் துறை வட்டாரத்தில் வலம் வருகின்றன. ஆனால், கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் போன்ற அதிகாரிகளுக்கு,அரசாணை விவரமே தெரியவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, அதிகாரிகள் தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.