10ம் வகுப்பு பொது தேர்வு இன்று துவக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. முறைகேடுகளைத் தடுக்க, 7,000 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. காலை, 9:15 மணி முதல், 12:00 மணி வரை தேர்வு நடக்கும். கடந்த ஆண்டு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் ஏராளமானோர், 'சென்டம்' எடுத்தனர். அதை கட்டுப்படுத்த, இந்த ஆண்டு, பாடங்களின் உள்ளே இருந்து சிக்கலான கேள்விகள் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 'தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், உரிய விதிகளின் படி தண்டனை வழங்கப்படும். ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால், தேர்வு மைய அங்கீகாரம் ரத்து; பள்ளி அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.