முறைகேடு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்து; குற்ற வழக்கும் பாயும்

பிளஸ் 2 தேர்வு முறைகேட்டில் சிக்கிய ஆசிரியர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வை ரத்து செய்யவும், அவர்கள் மீது குற்ற வழக்கு தொடரவும், கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணே, இன்ஜி., மற்றும் மருத்துவத்தில் சேர்வதற்கான அடித்தளமாக உள்ளது. எனவே, இன்ஜி., மற்றும் மருத்துவ, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற வைப்பதில், தனியார் பள்ளிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதற்காக, பள்ளிக்கல்வித் துறை, தேர்வுத் துறையின் அலுவலக உதவியாளர் முதல், மேலதிகாரிகள் வரை, தனியார் பள்ளிகளின் சார்பில், தேர்வுக்கு தேவையான உதவிகளை பெற முயற்சிக்கின்றனர். இதற்கு சில உதவியாளர்கள், ஆசிரியர்கள் துணை போகின்றனர். இந்த ஆண்டு, தனியார் பள்ளிகளுக்கு துணை போன புகாரில், ஆசிரியர்கள் பலர் சிக்கியுள்ளனர். முதற்கட்டமாக, ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில், மாணவர்களின் விடைத்தாளை ஆள் மாறாட்டம் செய்து எழுத உதவியதாக, நான்கு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.
இதுதவிர, பல தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு, 'பிட்' கொடுத்து உதவிய ஆசிரியர்களின் பட்டியலும் தயாராகி உள்ளது. அவர்களில் பலருக்கு, முதற்கட்டமாக விளக்கம் கேட்டு,
'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளதாகஅதிகாரிகள் தெரிவித்தனர். விளக்கம் வந்ததும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட உள்ளனர். புகாரில் சிக்கிய ஆசிரியர்களின் பட்டியலை, தேர்வுத் துறையின் உத்தரவை அடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்,
தமிழக பள்ளிக்கல்வித் துறை தலைமைக்கு அனுப்பியுள்ளனர். புகாரில் சிக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை ரத்து
செய்யவும், அவர்களின் குற்ற தன்மைக்கு ஏற்ப, போலீஸ் மூலம் குற்ற வழக்கு பதிவு செய்யவும், அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.