7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய அரசு ஊழியர்கள் எதிர்ப்பு சென்னையில் 24-ந்தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை,

7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் வருகிற 24-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

7-வது சம்பள கமிஷன்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் தொடர்பான 900 பக்கங்கள் கொண்ட சிபாரிசு அறிக்கையை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம், சம்பள கமிஷன் குழு தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் நேற்று முன்தினம் சமர்ப்பித்தார். 

7-வது சம்பள கமிஷன் பரிந்துரை மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகளை பறிப்பதாக உள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 24-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம்(தமிழ் பிரிவு) அறிவித்துள்ளது. 


வாரி வழங்குவது போல்...

இதுகுறித்து அந்த சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம்.துரை பாண்டியன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்குவது போல் 7-வது சம்பள கமிஷன் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது. ஆனால் அது உண்மை இல்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், ரூ.18 ஆயிரம் தான் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ.15 ஆயிரத்து 750 வாங்கி வருகிறார்கள். அதன்படி, ரூ.2 ஆயிரத்து 250 மட்டுமே உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிலும், வைப்புநிதி, இன்சூரன்ஸ் தொகையாக மாதம் ரூ.2 ஆயிரம் 580 பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வாங்கும் சம்பளத்தில் இருந்து ரூ.330 குறைவாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும். 

பல சலுகைகள் ரத்து

வீட்டு உபயோக பொருட் கள், சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் போன்ற பொருட்கள் வாங்குவதற்கு முன் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இனி அது வழங்கப்படாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பாண்டிகை காலங்களில் சம்பள முன் தொகையாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் இனி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. எனினும், மத்திய அரசு ஊழியர்கள் வாடகை கணக்கீடு உயர்த்தப்படாமல் 30 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ரகசிய அறிக்கை மூலம் ‘நன்று’ கிடைத்தால் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ‘மிக நன்று’ கிடைத்தால் மட்டுமே பதவி உயர்வு என்று கூறியிருப்பது, ஒரு சிலருக்கு மட்டுமே பதவி உயர்வு வாய்ப்பு அமையும். இதுபோன்று பல சலுகைகளை 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரையில் பறிக்கப்பட்டுள்ளது

24-ந்தேதி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரையில் பரிந்துரை செய்யப்பட்ட ஊதிய கமிஷனில் 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை தான் மிக மோசமானதாக உள்ளது. இந்த ஊதிய கமிஷன் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு முழுவதும் உள்ள 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய மந்திரி சபை, செயலாளர்கள் கூட்டத்தில், 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 24-ந்தேதி சென்னை அண்ணாசாலை தலைமை தபால்நிலையம் முன்பு மத்திய அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். அதன்பின்னர் வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்வது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.