மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக சீருடை, புத்தகம், நோட்டு பள்ளிக் கல்வி இயக்குநர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக ஒரு சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள் ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். அவரது அறிவிப்பை செயல்படுத்தும் பொருட்டு, தமிழகத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் அவர்கள் தொடர்ந்து படிக்க ஏதுவாக விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், ஒரு சீருடை ஆகியவற்றை உடனடியாக வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பாடப்புத்தங்கள், நோட்டுகள், சீருடை ஆகியவற்றை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், சமூகநலத் துறை ஆகியவற்றிடமிருந்து பெற்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக வழங்க பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.