40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்; மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் 40 லட்சம் பேர் ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழ் மாநில பொதுச்செயலாளர் எம்.துரைபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காலவரையற்ற வேலைநிறுத்தம்
7-வது சம்பள கமிஷன் தனது பரிந்துரையை 2015 நவம்பர் 19-ந் தேதியே மத்திய அரசிடம் வழங்கிவிட்டது. 6 மாத காலஅவகாசம் இருந்தும் அதை ஒட்டிய கோரிக்கைகள் மீதான பிரச்சினைகளை ஊழியர் தரப்பிடம் மத்திய அரசு பேசித்தீர்க்க முன்வரவில்லை. 

2016-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதியன்று டெல்லியில் கூடிய தேசிய போராட்டக்குழு, 2016-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதியன்று வேலைநிறுத்த அறிவிப்பை கேபினட் செயலாளரிடம் வழங்குவது என்றும், ஜூலை 11-ந் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவது என்றும் முடிவெடுத்துள்ளது.

40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்
அதன்படி ரெயில்வே பாதுகாப்பு, தபால், ஏ.ஜி, வருமானவரி, கலால், சுங்கம், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து மத்திய அரசுத்துறைகளிலும் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கு பெறுவார்கள்.மத்தியஅரசு செயலாளர்களோடு நடந்த பேச்சுவார்த்தையில் அடிப்படை கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை. குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரத்தில் இருந்து சற்று உயர்த்துவோம். அதே நேரத்தில் இந்த உயர்வை அனைவருக்கும் கொடுக்க முடியாது என்பதை ஊழியர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.


அதேபோல் புதிய ஓய்வூதியத்திட்டத்தை திரும்ப பெறவும், தனியார்மயத்தை கைவிடவும், தபால்துறையில் உள்ள ஜி.டி.எஸ். ஊழியர்களை சிவில் ஊழியர்களாக அறிவித்து நிரந்தர ஊழியர்களைப் போல் அனைத்து சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

முழுப்பொறுப்பு
மேலும், பாதுகாப்புத்துறை தனியார்மயம், ரெயில்வே தனியார்மயம் மற்றும் பல்வேறு துறைகளை தனியார்மயப்படுத்துவதை மறு பரிசீலனை செய்யவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ, அரசாங்கம் தயாராக இல்லை. கூட்டு ஆலோசனைக்குழு (ஜே.சி.எம்.) உருவாக்கப்பட்டதன் நோக்கமே பிரச்சினைகளை உடனுக்குடன் பேசித்தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் ஜே.சி.எம். அகில இந்திய அளவிலும், துறை அளவிலும் கூட்டப்படுவதேயில்லை. 

எனவே, மத்திய அரசு உடனடியாக ஊழியர் தரப்பு கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்து வேலை நிறுத்தத்தை தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்க்கவில்லையென்றால், ஏற்படும் சேவை இழப்பு, பொருள் இழப்பு, அனைத்திற்கும் மத்திய அரசே முழுப்பொறுப்பு ஏற்கவேண்டும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.