அரசு பள்ளிகளில் புதிய கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்

ராமநாதபுரம்,: மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் புதிய கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதுகுறித்த பட்டியல் அனுப்புமாறு பள்ளிக்கல்வி இயக்குனரகம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இணை இயக்குனர்(தொழிற்கல்வி) சார்பில் அனுப்பப்பட்டுள்ள அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஏற்கனவே மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள கணினி ஆசிரியர் காலி பணியிடங்கள், புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தேவைப்படும் பணியிடம் குறித்தும், விரைவில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம், சில பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு கூடுதலாக துவக்கும் நிலை இருப்பின் கூடுதல் ஆசிரியர் தேவை விபரம் குறித்தும் பட்டியல் தயாரித்து அனுப்ப வேண்டும்.
இந்த பணிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் விரைந்து முடித்து பட்டியல் தர வேண்டும், என அதில் கூறப்பட்டுள்ளது. இதனால், அரசுப்பள்ளிகளில் வேலை கேட்டு காத்திருந்த பட்டதாரி கணினி ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.