'சென்டம்' அதிகரிப்பால் பி.காம்., படிப்புக்கு போட்டி

பிளஸ் 2 தேர்வில், வணிகவியல் பாடத்தில், 'சென்டம்' எடுத்தவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டு, பி.காம்., 'சீட்' கிடைப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், கணிதம், இயற்பியல், தாவரவியல் மற்றும் விலங்கியலில், 200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட குறைந்தது.
ஆனால், வணிகவியல் பாடத்தில், 3,084 பேர் சென்டம் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை, வெறும், 819 ஆகவே இருந்தது. அதே போல் கணித பதிவியலில், 4,341 பேர் சென்டம் பெற்றனர். வணிக கணிதத்தில், 1,072 பேர் சென்டம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, கல்லுாரி பேராசிரியர்கள் கூறும்போது, 'கடந்த சில ஆண்டுகளாக, பி.காம்., படிப்புக்கான மவுசு அதிகரித்துள்ளது. வணிகவியலில் கடந்த ஆண்டை விட, மூன்று மடங்கு மாணவர்கள், அதிக அளவில் சென்டம் பெற்றுள்ளனர். எனவே, கல்லுாரிகளில் பி.காம்., படிப்பில் சேர, இந்த ஆண்டு கடும் போட்டி நிலவும்' என்றனர்.